நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Sunday, 14 September 2014

ஏகாதசி விரதங்கள் ஏன் ?

ஏகாதசி விரதங்கள் ஏன் ?


வைகுண்ட ஏகாதசியன்று முக்கியமாக உபவாசம் இருப்பது ஏன்? துவாதசியன்று அகத்திக் கீரையும், நெல்லிக்காயும், சாப்பிட வேண்டும் என்பது எதற்காக?
சந்திரன் பூமியை ஒருதடவை சுற்றிவர ஏறக்குறைய இருபத்தொன்பதரை நாட்கள் ஆகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு திதி (Phase of the moon) எனப்படும். ஒரு சந்திரமாதத்தில் 30 திதிகள் உள்ளன. அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரையில் உள்ள 15 திதிகள் சுக்லபட்சம் (வளர்பிறை) எனப்படும். பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரையில் உள்ள 15 திதிகள் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) எனப்படும். அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக உதித்து ஒன்றாக மறைகின்றன. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் 12 டிகிரி வீதம் சந்திரன் சூரியனிலிருந்து பிரிந்து செல்லுகிறது. நான்காவது நாள் அதாவது, சதுர்த்தசியன்று சந்திரன் சூரியனிலிருந்து 36 டிகிரி முதல் 48 டிகிரி வரை பின்னால் உள்ளது. பதினொன்றாவது நாள் ஏகாதசியன்று சூரியனிலிருந்து132 டிகிரி பின்னால் இருக்கிறது. பௌர்ணமியன்று சந்திரன் சூரியனிலிருந்து 180 டிகிரியில் இருக்கிறது. மேற்கூறிய நாட்களில் சூரியனிலிருந்து சந்திரன் தொலைவில் விலகிச் செல்லுவதில் புவிஈர்ப்பு (Gravitation) சக்தி அதிகமாகிறது. அந்த சமயத்தில் எப்போதும் போல உணவு அருந்தினால் அது சரியாக் செரிக்காது. ஆகையால் நமது முன்னோர்கள் அந்த நாட்களில் விரதம் இருக்கச் சொல்லி இருக்கிறார்கள்.

வைகுண்ட ஏகாதசியன்று சந்திரன் சூரியனுக்கு 135 டிகிரி பின்னால் இருக்கிறது. அன்று சூரியன் நடுவரைக்குத் தெற்கே மிக அதிகமான தூரத்தில் இருக்கிறான். அன்று புவியீர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதால் உபவாசம் இருக்கிறோம்.
ஏகாதசியன்று விரதமிருந்தால், முதல் பத்து நாட்கள் உணவு உட்கொண்டு அதனால் உள்ளே சேர்ந்துள்ள கழிவுப் பொருட்கள் கரைந்து வெளியேறுகின்றன. பதினோராவது நாளான ஏகாதசியன்று வயிறு சுத்தமாகிறது. அன்று ஜீரணக் கருவிகளுக்கும் ஓய்வு கிடைக்கிறது. பின் நமக்கு வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. முக்கியமாக வைட்டமின் ‘ஏ’ யும், ‘சி’ யும் தேவைப்படும். ஆகவேதான், துவாதசியன்று வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்த அகத்திக் கீரையையும், வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்த நெல்லிக்காயையும் உணவுடன் சேர்த்துக் கொள்ளுகிறோம். ஒவ்வொரு நாளும் நாம் செய்ய வேண்டிய சூரிய நமஸ்காரமும், இருமுறை ஏகாதசியோடு தொடர்ந்து வருகிற துவாதசி உணவும், நம்முடைய கண்ணொளியைக் காத்து உடல் நலத்தைப் பேணி வருகின்றன.
- ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி (குற்றாலம்)யினர் தொகுத்த, ‘இந்து சமயம் ஒரு விஞ்ஞானப் பார்வை என்ற நூலிலிருந்து

No comments:

Post a Comment