===============================
முதன் முதலில் நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது அஹோபிலம் திருத்தலத்தில். மீண்டும் அவதாரம் எடுத்த ஸ்தலம் கீழப்பாவூர். முன்னது பிரகலாதனுக்காக; பின்னது ரிஷிகளுக்காக.
கிருத யுகத்தில், பிரகலாதனுக்காக அவதாரம் எடுத்தார்; ஹிரண்யனை அழித்தார். இவ்விதமாக ஆக்கல், காத்தல், அருளல், அழித்தல், மறைதல் முதலிய பணிகளை முழுமையாகச் செவ்வனே செய்த நரசிம்மர் இவ்வுலகில் இருந்தது மிகக் குறுகிய காலம்தான். சில நாழிகைகளே நீடித்திருந்த நரசிம்ம அவதாரத்தை மகாலட்சுமியும் பார்க்கவில்லை.
அதேசமயம், நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததை உணர்ந்தனர் ரிஷிகள். அவர்களுள் காஸ்யபர் மகரிஷி, வருண பகவான், சுகோஷன் முனிவர் முதலானோர் நரசிம்மர் திருவுருவைத் தரிசனம் செய்ய விருப்பம் கொண்டனர். உடனே மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் இருந்தனர். ரிஷிகளின் கடுந்தவம் மகாவிஷ்ணு இதயக் கதவைத் தட்டியது. அசரீரியாகப் பேசினார் மகாவிஷ்ணு. பொதிகை மலையில் ரிஷிகளுக்காக அகத்தியரால் ஏற்படுத்தப்பட்ட மணிமுக்தா தீர்த்தத்தில் நீராடிய பின் அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் எம்மை நோக்கித் தவம் செய்க என்று அசரீரி குரல் ஒலித்தது.
அதன்படி ரிஷிகள் தவம் செய்தனர். தவத்தில் ஆனந்தம் அடைந்த மகாவிஷ்ணு, தான் முன் எடுத்த நரசிம்ம அவதாரத்தை ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் மகா உக்கிரமூர்த்தியாக 16 திருக்கரங்களுடன் காட்சியளித்தார். அத்துடன் காட்சியளித்த ஷேத்திரத்திலேயே நிரந்தரமாகக் குடிகொண்டு விட்டார். இந்தக் காட்சியானது வேறெங்கும் காண முடியாத சிறப்பாகும். இந்தப் புண்ணியமிக்க ஷேத்திரம் மன்னர்கள் காலத்தில் ஷத்திரிய சிகாமணி நல்லூர் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் தற்போது கீழப்பாவூர் என அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தாலூகாவில் அமைந்துள்ளது கீழப்பாவூர்.
பிரகலாதனுக்காகக் கிழக்குத் தொடர்ச்சி மலையில் மிக உயர்ந்த பகுதியில் ஓடும் பவநாசினி நதிக்கரையில் உள்ள அஹோபிலத்தில் தோன்றிய நரசிம்மர் இரண்டாவது முறையாக, ரிஷிகளுக்காக அவதாரம் எடுத்து நிரந்தரமாக உறைந்திருப்பது மேற்குத்தொடர்ச்சி மலையில் தோன்றிச் சமதளப் பகுதியில் ஓடும் சித்ரா நதிக்கரையிலுள்ள கீழப்பாவூர் ஷேத்திரத்தில்.
மகா உக்கிரமூர்த்தியான நரசிம்மப் பெருமாள் சன்னதியின் முன்பாக அவருடைய உக்கிரத்தைத் தணிக்கும் நரசிம்மர் தீர்த்தம் என்னும் மாபெரும் தெப்பக்குளம் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும்.
சுமார் 300 வருடங்களுக்கு முன்னால் இத்திருக்கோயில் அமைந்திருக்கும் பகுதியில் சாயரட்ச வேளையில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்குமாம். இதனால் பக்தர்கள் அப்பகுதிக்குச் செல்லப் பயந்தனர். பிற்காலங்களில் நரசிம்மருக்கு இளநீர் மற்றும் பால் அபிஷேகம் செய்ய ஆரம்பித்த பிறகு சாந்த சொரூபியாக மாறிவிட்டார் என்று கூறுகின்றனர்.
புராணச் சிறப்புமிக்க இத்திருக்கோயிலைக் கட்டியது யார்? எப்போது? என்ற விபரம் தெரியவில்லை. எனினும் சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முந்தையது என இக்கோயில் கல்வெட்டு கூறுகிறது. அக்கல்வெட்டில் சோனாடு கொண்டருளிய சுந்தரபாண்டியன், எம்மண்டலமும் கொண்டருளிய முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன், தென்பாண்டி நாட்டுக்குப் பெருந்தொண்டு செய்த பாண்டியன், ஜடாவர்மன் ஸ்ரீவல்லபன் முதலிய பெயர்கள் காணப்படுகின்றன.
மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி விக்கிரம பாண்டியன் தான் ஆட்சிக்கு வந்த ஏழாவது ஆண்டில் இத்திருக்கோயிலுக்கு நித்திய பூஜைகளுக்கு நிலங்கள் வழங்கிய செய்தியும் பொறிக்கப்பட்டுள்ளது. சோழ மன்னர்கள் போல் பாண்டிய மன்னர்களும் இத்திருக்கோயிலுக்கு நலங்கள் வழங்கிய செய்திகள் கல்வெட்டில் காணப்படுகின்றன.
சோழர் கால கட்டடக் கலையை இத்திருக்கோயில் நினைவூட்டுகிறது. சோழர்கள் காலத்தில் இவ்வூர் ஷத்திரிய சிகாமணி நல்லூர் என்றும், சோழ மன்னனின் மனைவி அறிஞ்சிகைப் பிராட்டியின் பெயரால் அறிஞ்சிகைப் பிராட்டி சதுர்வேதி மங்கலம் என்றும், குறுமறை நாட்டு முனைமோகர் பாகூர் என்றும், சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
ஸ்தலம், மூர்த்தி, தீர்த்தம் மட்டுமின்றிப் பல்வேறு சிறப்புகள் நிறைந்தது கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம். இந்தியாவில் மூன்று இடங்களில்தான் 16 திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் ஆலயம் உள்ளது. ஒன்று இராஜஸ்தான் மாநிலத்திலும், மற்றொன்று பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி எனும் சிறுகுன்றிலும் உள்ளது. மூன்றாவதாகக் கீழப்பாவூரில் மட்டுமே சமதளமான பகுதியில் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றிலும் குளங்கள், வயல்கள் நிறைந்து பசுமையாக உள்ளது. ஆலயத்தின் முன்பு தெப்பக்குளம் அமைந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக ரிஷிகளுக்குக் காட்சி கொடுத்தது மட்டுமின்றி, நிரந்தரமாகத் தங்கி இருப்பதும் இங்கு மட்டுமே! இவ்வாலயத்தில் கால் வைத்ததும் பதற்றம், கவலை, மன அழுத்தம் முற்றிலும் நீங்குகிறது.
சுவாதி நட்சத்திர வழிபாடு இங்குச் சிறப்புடன் நடந்து வருகிறது. அன்று 16 வகை மூலிகைகளால் மூலமந்திர ஹோமம் நடைபெறுகிறது. பால், இளநீர் அபிஷேகம், நீராஞ்சனம் வழிபாடு, நெய்தீபம் ஏற்றுதல் ஆகியவற்றுடன் சிறப்புப் பூசைகளும் நடக்கின்றன.
கடன் தொல்லை, கல்யாணத் தடை, நீண்ட நாள் நோய், நீதிமன்ற வழக்கு ஆகியவற்றிற்குரிய பரிகாரத் தலமாகும். செவ்வாய், புதன், சனி முதலிய நாள்களும் திருவோணம், பிரதோஷம், புரட்டாசி சனிக்கிழமை, நரசிம்ம ஜெயந்தி முதலிய தினங்களும் மற்றும் மாலைவேளையும் வழிபடுவதற்கு உரிய நாள்களாகும்.
கோயில் நடைத் திறப்பு : காலை 8 – 11.30. மாலை 5 – 7.30.
வேளாண்மைப் பகுதியிலுள்ள இந்த நரசிம்மரை வழிபடுபவர்களுக்கு ஆயிரம் மடங்கு பலன் அதிகம் கிட்டும் என்பது ஐதீகம். ரிஷிகளின் விருப்பம் நிறைவேறிய இத்திருத்தலத்திற்கு நேரில் வந்து வழிபடுபவர்களின் விருப்பங்களை உடனே நிறைவேற்றுகிறார் நரசிம்மர்.
கோயில் அமைவிடம்
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவில் தென்காசி – ிருநெல்வேலி சாலையில் திருநெல்வேலியிலிருந்து மேற்காக 32 கி.மீ. தொலைவிலும் தென்காசியிலிருந்து கிழக்காக 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது பாவூர் சத்திரம் எனும் ஊர். இங்கிருந்து சுரண்டை எனும் ஊர் செல்லும் வழியில் 2 கி.மீ. அருகில் உள்ளது கீழப்பாவூர்.


No comments:
Post a Comment