சரி, , ஈ.எஸ்.பி , E.S.P (Extra Sensory Perception) உண்மைதானா? இல்லை, மனிதர்களின் ஆதீத கற்பனைகளின் விளைவா?
நாம் ஆறறிவு கொண்டவர்கள். ஐம்புலன்களால் செயல்படுபவர்கள். பகுத்தறிவு எனப்படும் அந்த ஆறாம் அறிவு மூலம் நாம் சிந்திக்கிறோம். முடிவுகள் எடுக்கிறோம். செயல்படுகிறோம். ஆனால் அதையும் மீறிய ஒன்றாக, புலன்களுக்கு அப்பாற்பட்டதாக, ஏழாம் அறிவாக விளங்குவதுதான் ஈ.எஸ்.பி.
உலகெங்கிலும் பல்வேறு ஈ.எஸ்.பி. சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல ஈ.எஸ்.பி. மனிதர்கள், தங்களது ஆற்றல்களைக் கொண்டு பல்வேறு அதிசயச் செயல்களைச் செய்துள்ளனர். குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க உதவியுள்ளனர்
சரி, ஈ.எஸ்.பி என்றால் என்ன? பொதுவாக பின்னர் வருவதை, அல்லது நடக்கப் போகும் ஒன்றை முன் கூட்டியே அறிவதுதான் ஈ.எஸ்.பி. எனப்படுகிறது. பொதுவாக, ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் எல்லா மனிதருக்குமே ஓரளவு இருக்கிறது. ஆனால் பலரும் அந்த ஆற்றலின் மீது கவனம் செலுத்துவதில்லை. அல்லது அந்தத் திறனை வளர்த்துக் கொள்ளுவதில்லை. அதனால் பலரும் அது பற்றிய உண்மைகளை அறியாமல் உள்ளனர். உதாரணமாக திடீரென நாம் நெருங்கிய நண்பர் ஒருவரைப் பற்றி அடிக்கடி நினைப்போம். அவரைப் பார்க்க வேண்டுமென நினைப்போம்.
திடீரென அவர் கண் முன்னே வந்து நிற்பார். அல்லது அவரைப் பற்றிய செய்தி நமக்கு வந்து சேரும். இதுதான் ஈ.எஸ்.பி. என்பதன் எளிமையான விளக்கம். இந்த ஈ.எஸ்.பி யில் பல வகைகள் உள்ளன.
வேறு ஒருவருடைய எண்ணங்களை, மனதில் உள்ள செய்திகளைப் படிக்கும் ஆற்றல் – டெலிபதி எனப்படுகிறது.
எதிர்காலத்தை அவதானித்து, மிகச் சரியாக அதை முன்கூட்டியே கூற முடிவதற்கு - Precognition என்று பெயர்.
இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேறு ஒரு இடத்தில் நடக்கும் விஷயங்களை சரியாகக் கணித்துக் கூறுவதற்கு – Clairvoyance என்று பெயர்.
ஒரு நபரது கடந்த காலத்தை, சம்பவங்களை, வாழ்க்கை நிகழ்ச்சிகளை மிகத் துல்லியமாகக் கூறுவதற்கு Retro cognition என்று பெயர்.
ஒரு நபருக்குச் சொந்தமான பொருளை தொடுவதன் மூலமோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட ஏதேனும் உடைமைப் பொருள் ஒன்றைக் கொண்டு அந்த நபர் பற்றி, அவர் இருக்கும் இடம், தன்மை, அவரது செயல்பாடுகள் பற்றிக் கூறும் திறனுக்கு Psychometric என்று பெயர்.
இதில் முக்கியமான விஷயம் ஈ.எஸ்.பி என்பது அமானுஷ்ய ஆற்றலோ அல்லது ஆவிகள் போன்றவற்றின் உதவியால் செயல்படுத்தப்படுவதோ இல்லை. முழுக்க முழுக்க மூளை மற்றும் மனத்தில் செயல்பாடுகளால் ஏற்படும் அதீத திறனே ஈ.எஸ்.பி.
பண்டைய புராணங்களில் ஈ.எஸ்.பி பற்றிய பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன.
மகாபாரதத்தில், குருஷேத்திரப் போர் நடக்கும் காலத்தில், அரண்மனையில் இருந்து கொண்டே, பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு அந்தப் போர் களத்தில் நடக்கும் காட்சிகளை சஞ்சயன் விவரித்தது Clairvoyance எனப்படும் இந்த ஈ.எஸ்.பி. ஆற்றலைக் கொண்டுதான்.
ஆதிசங்கரர் சன்யாசம் ஏற்கும் தறுவாயில் அன்னை ஆர்யாம்பாள், தனது அந்திமக்காலத்தில் அவர் அருகில் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள், சங்கரரும் அதற்குச் சம்மதிக்க, பல ஆண்டுகள் கழித்து ஆர்யாம்பாள் நோய் வாய்ப்பட்ட போது மகன் சங்கரரை நினைக்க, உடனே பல மைல் தொலைவில் தவம் செய்து கொண்டிருந்த போதும் சங்கரர் அன்னையின் அழைப்பை உணர்ந்து, இறுதித் தறுவாயில் உடன் இருப்பதற்காக விரைந்து வந்தார். இந்தத் தகவல் பரிமாற்றம் தான் ’டெலிபதி’ எனப்படுகிறது.
நாஸ்ட்ரடாமஸ் எதிர்காலத்த்தில் இந்த சமயத்தில், இன்னின்ன சம்பவங்கள் நடக்கும் என்பதை கணித்துக் கூறியதும் ஒரு விதத்தில் Precognition எனப்படும் இந்த ஈ.எஸ்.பி. ஆற்றலின் உதவியோடுதான்.
ஒரு சில ஜோதிடர்கள் அல்லது ஆரூடம் சொல்பவர்கள், தங்களைக் காண வரும் நபரின் கடந்த காலத்தை மிகத் துல்லியமாகவும், வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தெளிவாகவும் கூறுவது Retro cognition என்ற ஈ.எஸ்.பி. ஆற்றலால் தான்.
ஒருமுறை பகவான் ரமணரை கேரளாவின் புகழ் பெற்ற நாராயண குரு சந்திக்க வந்திருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். வெகு நேரம் ஒருவரையொருவர் பார்த்தபடி இருந்தனர். ஆனால் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. பின் இறுதியாக “அங்ஙனே ஆவட்டே…” என்று கூறி நாராயண குரு விடை பெற்றார். ரமணரும் தலைசயைத்தார். அதன் பின்னர்தான் பக்தர்களுக்கு அவர்கள் இருவரும் பேசாமலே பேசிக் கொண்டது – தங்கள் எண்ணங்கள் மூலம் தகவல் பரிமாறிக் கொண்டது – புரிந்தது. இதைத் தான் ஆன்மப் பரிமாற்றம் என்பர்.
இது கூட ஒருவிதத்தில் ஈ.எஸ்.யைச் சேர்ந்ததுதான். இதே போன்ற சம்பவங்கள் சேஷாத்ரி சுவாமிகள், காஞ்சிப் பெரியவர், யோகி ராம்சுரத்குமார், மாயம்மா என பல ஞானிகளது வாழ்வில் நிகழ்ந்துள்ளன.
முதன் முதலில் ஈ.எஸ்.பி. பற்றிய ஆய்வுகள் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் தொடங்கின. 1923ல் சிகாகோவில் டெலிபதி சோதனைகள் Zenith Broad Casting Company உதவியுடன் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் வியப்பைத் தந்தன. 20 பேர்களில் குறைந்த பட்சம் ஒருவருக்காவது ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் இருப்பது தெரிய வந்தது.
1924 ஆம் ஆண்டு ஜெர்மானிய மனோதத்துவ அறிஞர் ஹேன்ஸ் பெர்கர் இது போன்ற ஆற்றல்கள் இருப்பதாகக் கூறப்படும் சிலரை ஆய்வு செய்த போது அவர்கள் அனைவரும் ஆல்ஃபா என்னும் அலைவரிசையில் இருப்பதைக் கண்டறிந்தார். அதன் பின்னர் மூளையின் ஒருவிதமான திறன் மிக்க அந்தச் செயல்பாடு நிலைக்கு ‘ஆல்பா’ நிலை என்று பெயரிட்டனர்.
இத்தகைய ஆழ்மன ஆற்றல்களை வளர்ப்பதற்கு பிற்காலத்தில் ஆல்பா தியானமுறை புழக்கத்திற்கு வந்தது.
இதை மேலும் ஆராய்ச்சி செய்த வில்லியம் க்ரூக்ஸ் என்பவர், மூளையில் ஏற்படும் ஒருவித ரசாயன மாற்றமே இவ்வகை ஈ.எஸ்.பி. ஆற்றல்களுக்குக் காரணமாகிறது என்பதைக் கண்டறிந்தார். டாக்டர் சேரெய்ல்ன் என்பவர் இது குறித்து விரிவாக ஆராய்ந்தார்.
அவர் தனது ஆய்வு முடிவில், ”மூளையில் பீனியல் சுரப்பி, பிட்யுடரி சுரப்பி என்று இரண்டு சுரப்பிகள் உள்ளன. இவற்றில் ஏற்படும் மாற்றங்களால், அதிர்வுகளால் பல்வேறு மாற்றங்கள் மனித உடலிலும் எண்ணங்களிலும் எழுகின்றன. குறிப்பாக பீனியல் சுரப்பி அதிகமாகச் சுரப்பின் ஈ.எஸ்.பி., டெலிபதி, வருங்காலம் உரைத்த போன்ற ஆற்றல்கள் பெருகக் காரணமாகின்றன” என்று கூறினார்.
இந்த பீனியல் சுரப்பியின் உற்பத்தி நமது நெற்றியின் புருவ மையத்தைத் தூண்டினால் அதிகமாகிறது என்பதும், அதனாலேயே நமது இந்திய யோகிகள் அந்தப் புருவ மத்தியாகிய ஆக்ஞா சக்கரத்தை மையமாக வைத்து தியானம், யோகம் போன்றவற்றைச் செய்து வந்தார்கள் என்பதும் மிக முக்கியமான விஷயமாகும்.
நாம் நமது மூளையில் சுமார் 8% பகுதியை மட்டுமே பயன்படுத்துகிறோம். மீதிப் பகுதிகளையும் தூண்டி, நாம் பயன்படுத்த ஆரம்பித்தோமானால் ஈ.எஸ்.பி மட்டுமில்லாமல், பல்வேறு ஆற்றல்களும் கைவரப் பெற்றவர்களாவோம் என்பது உண்மை.
மனிதர்கள் மட்டும் தான் என்றில்லை. விலங்குகளுக்கும் கூட இத்தகைய ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் உண்டு. குறிப்பாக மனிதர்களோடு நெருங்கி வாழும் நாய், பூனை போன்றவற்றிற்கு இயல்பாகவே இந்த ஆற்றல்கள் அதிகம்.


No comments:
Post a Comment