பிரதோஷம் வழிபாடு
மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரியவிரதங்களில் பிரதானமானதாகும்.விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பின்னர் சிவபுராணம், சிவ நாமங்களை படித்து கோயிலுக்கு சென்று சிவனை வழிபட்டு நந்திக்கு காப்பரிசி படைத்து நெய்தீபம் ஏற்றி பிரார்த்திக்க வேண்டும்.
நந்தி தேவருக்கு ருத்ரன் என்றொரு பெயரும் உண்டு. ருத் என்றால் துக்கம் ரன் என்றால் விரட்டுபவன், ருத்ரன் என்றால் துக்கத்தை விரட்டுபவன் என்று பொருள். எனவே பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்தியெம் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
பிரதோஷகாலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு நெய் விளக்கு ஏற்றி காப்பரிசி வைத்து பூஜை செய்கிறார்கள்.
வழமையான நாட்களில் ஆலயத்தை மூன்று முறை வலம் வரும் வழக்கத்திற்கு மாறாக பிரதோஷ விரதநாளில் சோம சூக்கப் பிரதட்சணம் செய்ய வேண்டும்.
முதலில் சிவலிங்கத்தையும் தேவரையும் வணங்கிகொண்டு அப்பிரதட்சணமாகச் சண்டேசுவரர் சந்நிதி வரை சென்று அவரை வணங்கி கொண்டு, அப்படியே திரும்பி வந்து முன்போல சிவலிங்கத்தையும் ரிஷப தேவரையும் வணங்கிக் கொண்டு வழக்கம்போல் பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரும்போது சுவாமி அபிஷேகத் தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டியைக் கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி அப்பிரதட்சணமாக சந்நிதிக்கு வந்து சிவலிங்கத்தையும் ரிஷபதேவரையும் வணங்க வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பல அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என நூல்கள் கூறுகின்றன.

No comments:
Post a Comment