நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 5 March 2016

சிவனுக்குகந்த மகாசிவராத்திரி




சிவனுக்குகந்த மகாசிவராத்திரி
இந்து மதம் பல தெய்வ வழிபாட்டை ஏற்பதால் விரதங்களையும் பலவாகப் பிரித்துள்ளது. இந்த வகையில் இந்து மதம் கூறும் விரதங்களை தெய்வங்களின் அடிப்படையில் வகுப்போமாயின் சிவ விரதம், சக்தி விரதம், விநாயக விரதம், சுப்பிரமணிய விரதம், விஷ்ணு விரதம், வைரவ விரதம், வீரபத்திர விரதம் என வகைப்படுத்தலாம். இவ்விரதங்களை நாள் விரதம், வார விரதம், மாத விரதம், வருட விரதம் என பிரிக்கலாம். இந்நான்கு கால விரதங்களும் பெளர்ணமி விரதம், சஷ்டி விரதம், நட்சேத்திர விரதம், சதுர்த்தி விரதம் என பிரிக்கப்பட்டுள்ளன.

சிவ விரதத்தினை நோக்கும் போது முக்கிய விரதங்களாக மகா சிவராத்திரி, சோமவாரம், திருவாதிரை, பிரதோஷம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். மகா சிவராத்திரி விரதம் சிவனது அருவத்திருமேனியான சிவலிங்கத்தினை வழிபடும் ஓர் விரதமாகும். இவ்விரதம் மாசி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தியில் அனுட்டிக்கப்படுகின்றது. சிவ விரதங்களில் மிகவும் முக்கியத்துவம் உடைய ஓர் விரதமாக இது விளங்குகின்றது. இதனால் சிவனுக்கு உகந்தது சிவராத்திரி என பேசப்படுகின்றது.

சக்திக்கு ஒன்பது ராத்திரி. அது நவராத்திரி. சிவனுக்கு ஒரு ராத்திரி. அது சிவராத்திரி. சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனை அர்ச்சிக்கும் ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பலவகைப் பொருளைத்தரும். சிவமான ராத்திரி என்பதே இவைகளில் மிகப் பொருத்தமானதாகும்.

சிவபிரான் திருவருளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் சைவமக்கள் அனுட்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது சிவராத்திரியாகும். சிவராத்திரி என்ற தொகைச் சொல் சிவனை விசேடமாக வழிபடுவதற்குரிய இரவு என பொருள்படும். சிவராத்திரி விரதம் மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, மாத சிவராத்திரி என மூவகைப்படும். மாசி மாத தேய்பிறைச் சதுர்த்தசியில் நோற்கப்படுவது மகா சிவராத்திரி எனப்படும். அமாவாசையும் சோமவாரமும் கூடிய தினத்தில் அனுஷ்டிக்கப்படுவது யோக சிவராத்திரி ஆகும். ஆண்டின் மாதந்தோறும் தேய்ப்பிறைச் சதுர்த்தசியில் அனுட்டிக்கப்படுவது மாத சிவராத்திரி எனப்படும். இம் மூவகைச் சிவராத்திரிகளில் இக்காலத்தில் மகா சிவராத்திரியே பெரிதும் பின்பற்றப்படுகின்றது.

மாசி மாதம் கிருஷ்ண சதுர்த்தசியில் நள்ளிரவில் சிவ பெருமான் லிங்கத்தில் தோன்றினார். அன்றே மகா சிவராத்திரி ஆதலால் இப்பொழுதும் அந்த இரவில் உலகிலுள்ள எல்லா இலிங்கங்களிலும் சிவன் தோன்றுகிறார். அன்று சிவபூஜை எல்லோருக்கும் விருப்பத்தைக் கொடுக்கக் கூடியது. அன்று காலை குளித்துக் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு சிவாலயம் சென்று பஞ்சாட்சரம் அல்லது சிவ நாமத்தை ஜெபிக்க வேண்டும். மகா சிவராத்திரி தினத்தின் முன்தினமான திரயோதசியில் ஒருவேளை பகல் உணவருந்தி மறுநாள் முழுவதும் உபவாசமிருந்து சிவராத்திரியின் மறுதினம் பாரணையில் உணவுண்ணல் விரத விதியாகும். மேலும் சிவராத்திரி தினத்தில் இரவு முழுவதும் நித்திரை கொள்ளாது விழித்திருந்து சிவாலயத்தில் நடைபெறும் நான்கு ஜாமப் பூஜை வழிபாடுகளின் போது இலிங்க தரிசனம் செய்தல் மற்றொரு முக்கிய விதியாகும்.

சிவபூஜை விதி தவறாமல் நான்கு ஜாமத்தும் ஜாமத்திற்கு ஒரு முறையாகப் பூஜை செய்ய வேண்டும்.

முதலாம் ஜாமம் : பால், தயிர், நெய், கோசலம், கோமேயம் என்னும் இவ்வைந்தும் கலந்த பஞ்ச கவ்வியத்தில் அபிஷேகம் செய்து வில்வம் சாத்தி தாமரை மலரால் அர்ச்சிக்க வேண்டும்..அச்சமயம் பயற்றம் பருப்பு, சேர்ந்த பொங்கல் நிவேதித்து தூப தீப ஆராதனைகள் செய்து இருக்கு வேதம் ஓதி இரு கை கூப்பி அர்க்கியம் கொடுத்து அஷ்டாங்கமாக வணங்கி வழிபடல் வேண்டும்.

இரண்டாம் ஜாமம் : பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்து சந்தனத்துடன் தாமரை மலரும் சாத்தி துளசியால் அர்ச்சித்து பாயாசம் நிவேதித்து யசுர் வேதம் ஓதி வணங்க வேண்டும்.

மூன்றாம் ஜாமம் : தேனால் அபிஷேகம் செய்து அரைத்த பச்சைக் கற்பூரத்துடன் சாதிமுல்லை மலர் சாத்தி, முக்கிளையுடன் கூடிய வில்வ தளத்தால் அர்ச்சித்து எள், அன்னம் நிவேதித்தும் சாம வேதம் ஓதி வழிபடல் வேண்டும்.

நான்காம் ஜாமம் : கருப்பஞ் சாற்றினால் அபிஷேகித்து அரைத்த குங்குமப் பூவுடன் நந்தியாவட்டை மலரும் சாத்தி நீலோற்பல மலரால் அர்ச்சித்து சுத்த அன்னம் நிவேதித்து அதர்வ வேதம் ஓதி வழிபடல் வேண்டும்.

இவ்வாறு நான்கு ஜாமத்தும் நித்திரை நீங்கிப் பூஜித்து மறுநாள் அதிகாலையில் புனித நீராடி அனுஷ்டானம் செய்து தமது தீட்சா குருவைத் தியானித்து தக்கவாறு தானம் தந்து சூரியன் உதித்து ஆறு நாளிகைக்குள் பாரணை செய்ய வேண்டும். இவ்வறு 24 வருடம் விரதம் நோற்றுப் பின் கோதானம், பூதானம், சுவாணதானம் முதலியன தந்து விரதத்தைப் பூர்த்தி செய்வோர் சிவகதி அடைவர்.

அறிந்தோ அறியாமலோ கூட ஒருவன் சிவராத்திரி அன்று விழித்திருந்தால் புண்ணியம் கிட்டிவிடும். சிவராத்திரியன்று விழித்திருக்க வேண்டியது தானே முக்கியம் என நினைத்து சிலர் சினிமா கொட்டகைகளுக்கும், நாடகக் கொட்டகைகளுக்கும் சென்று பொழுதைக் கழிக்க விரும்புகின்றார்கள். சிவராத்திரியின் போது தூங்காமல் இருந்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால் சிவராத்திரியின் நோக்கம் அதுவல்ல. சிவராத்திரி நாள் இரவில் நான்கு ஜாமத்திலும் சிவலிங்க வழிபாடுகளைத் தரிசித்தும், வழிபாடு செய்தும் சிவபெருமானைச் சிந்தித்திருந்து நற்பேறு பெற வேண்டும் என்பதே உண்மையாகும். சிவராத்திரியன்று சிவன் கோயில்களிலோ மற்றைய கோவில்களிலோ நான்கு ஜாமமும் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டும் தானதருமங்கள் செய்தும் சிவபெருமானின் புகழ் பாடியும் சிவபுண்ணியம் அடையலாம்.

No comments:

Post a Comment